சிகரெட் வாங்கியதற்கு பணம் கேட்டதால் தகராறு: கடை ஊழியரை வாளால் வெட்டியவர் கைது
சிகரெட் வாங்கியதற்கு பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் கடை ஊழியரை வாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.;
சிவகங்கை பஸ் நிலையத்தில் 9-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தாமோதரன் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவருடைய கடையில் கார்த்திகேயன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது கடைக்கு வந்த 4 பேர் பணம் கொடுக்காமல் சிகரெட் கேட்டுள்ளனர். அதற்கு கார்த்திகேயன் மறுக்கவே அவரை வாளால் வெட்டினர். தடுக்க வந்த அற்புதராஜ் என்பவருக்கும் வாளால் வெட்டு விழுந்தது. மேலும் டீக்கடையையும் சூறையாடினர்.
பின்னர் 4 பேரும் அருகில் இருந்த வைரமுத்து என்பவரின் டீக்கடையையும் சேதப்படுத்தினார்கள். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அதில், வைரம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார்(வயது 26), அண்ணாமலை நகரை சேர்ந்த அருண்குமார் (24), சுந்தர் (26), மகாதேவன் (20) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாதேவனை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.