மது போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்

நாட்டறம்பள்ளி அருகே மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-11-04 17:18 GMT

நாட்டறம்பள்ளி அருகே மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மதுபோதையில் வந்த ஆசிரியர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆத்தூர் குப்பம் பகுதியை சேர்ந்த இளவரசன் (வயது 54) என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளிக்கு வரும்போது சில நேரங்களில் மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கல்வித் துறை அதிகாரிக்கு புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் பள்ளியில் மாணவ -மாணவிகளை ஆபாசமாக திட்டியும், சரிவர பாடம் நடத்தவில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் கடந்த 2-ந் தேதி ஆசிரியர் இளவரசன் மது போதையில் பள்ளிக்கு வேலைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜா அண்ணாமலை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியர் மது போதையில் இருந்தாரா என தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், அவர் மது போதையில் இருந்தாரா என மருத்துவ அறிக்கை வேண்டியும் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் ஆசிரியரை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர்.

பணியிடை நீக்கம்

பரிசோதனை அறிக்கை வந்த பிறகு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு மருத்துவ அறிக்கை அனுப்பி மேல் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் தமிழ் ஆசிரியர் இளவரசன் மது போதையில் இருந்தது உறுதியானது. அதைத்தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்