பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு: தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

Update: 2024-07-27 02:07 GMT

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் அப்பட்டமான அரசியல் பாகுபாடு காட்டப்பட்டதாக கடும் குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக தமிழகம் வஞ்சிக்கப்பட்டதால் இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடி தலைமையில் நடக்க இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

அதேபோல, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த மாநில முதல்-மந்திரிகளும் புறக்கணிப்பை அறிவித்திருக்கின்றனர். பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு ரூ,59,000 கோடியும், ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக ரூ,15,000 கோடியும் வழங்கப்பட்டு தமிழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு உள்ளன. இத்தகைய போக்கு கூட்டாட்சி அமைப்பிற்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் அருகில், தாராபூர் டவர் முன்பாக சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், எனது (செல்வப்பெருந்தகை) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதேபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் மத்திய அரசின் தமிழகத்தை வஞ்சிக்கிற போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்