நாட்டரசன்கோட்டை அருகே மண் ஓடுகளால் அடுக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் கண்டெடுப்பு

நாட்டரசன்கோட்டை அருகே மண் ஓடுகளால் அடுக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.;

Update: 2023-10-15 19:00 GMT

வித்தியாசமான மண் ஓடுகள்

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையை அடுத்த பனங்குடிக் கண்மாய் அருகில் மயிலாடும்போக்கு என்னும் இடத்தில் வித்தியாசமான அமைப்பில் மண் ஓடுகள் இருப்பதாக பனங்குடியைச் சேர்ந்த சசிக்குமார், பாண்டியன் இளங்கோ, முத்தரசு ஆகியோர் சிவகங்கை தொல்நடைக்குழுவிற்கு தகவல் கொடுத்தனர்.இதை தொடர்ந்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் காளிராசா, செயலர் நரசிம்மன் துணைச்செயலர் முத்துக்குமார், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் அப்பகுதியில் மேற்பரப்புக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு மண்ணிற்கு அடியில் பழமையான கழிவுநீர்குழாய் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா கூறியதாவது:-

கழிவுநீர் கால்வாய்

பனங்குடிக் கண்மாய் மயிலாடும்போக்கு பகுதியில் கண்மாய் கரையை அகலப்படுத்துதல் மற்றும் உயர்த்தும் பணி நடைபெற்றது. அப்பணியின் பின்பு அங்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் குழந்தைகள் விளையாடும் போது வித்தியாசமான மண் ஓடுகள் கிடைத்தன. இந்நிலையில் நாங்கள் அந்த இடத்தில் மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டோம். இங்கு காணப்பட்ட கழிவுநீர் கால்வாய் போன்ற அமைப்பு மண்ணால் உறை போன்று செய்யப்பட்டு ஒன்றின் மேல் ஒன்றாக கோர்வையாக அடுக்கி படுக்கை வசத்தில் நீர் போவதற்கான அமைப்பாக ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற கழிவு நீர் குழாய் அமைப்பு சிந்துச் சமவெளி நாகரிகம் தொட்டு காணப்படுகிறது என்றாலும் தமிழகத்திலும் கீழடி போன்ற அகழாய்வுகளில் இவ்வாறான கழிவு நீர்க்குழாய்கள் காணக் கிடைக்கின்றன. கீழடியில் காணப்பட்ட கழிவுநீர்க்குழாய்களை விட இவை அளவில் சற்று பெரியதாக இருக்கிறது. இதன் அமைப்பு முறையும் கீழடி அகழாய்வில் கிடைத்த குழாயினும் மாறுபட்டதாகவே தெரிகிறது.

எனவே இந்த இடத்தில் தொல்லியல் துறையினர் விரிவான ஆய்வை மேற்கொண்ட பிறகே முழுமையான தகவல் தெரியவரும்,

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்