மூடப்பட்ட கோவில் கிணற்றில் இருந்து 3 கற்சிலைகள் கண்டுபிடிப்பு
பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் மூடப்பட்ட கோவில் கிணற்றில் இருந்து 3 கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த கிணற்றை மீண்டும் தோண்ட வருவாய்த்துறை தடை விதித்துள்ளது.
பெருந்துறை:
பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் மூடப்பட்ட கோவில் கிணற்றில் இருந்து 3 கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த கிணற்றை மீண்டும் தோண்ட வருவாய்த்துறை தடை விதித்துள்ளது.
விஜயபுரி அம்மன்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சந்தைப்பேட்டை பெரிய குளம் என்ற இடத்தில் பழமையான விஜயபுரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெறும்போது தீர்த்தம் கொண்டுவர பக்தர்கள் அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மூங்கில்பாளையம்பிரிவு என்ற இடத்தில் உள்ள ஒரு கிணற்றுக்கு செல்வது வழக்கம். கிணறு அமைந்துள்ள இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கோவில் கிணறு பாழடைந்து விட்டதால் பல ஆண்டுகளாக யாரும் தீர்த்தம் கொண்டுவர அந்த கிணற்றுக்கு செல்வதில்லை என்று கூறப்படுகிறது. நாளடைவில் அந்த கிணறும் மண்ணைப்போட்டு மூடப்பட்டுவிட்டது.
3 கற்சிலைகள்
இ்ந்தநிலையில் விஜயபுரி அம்மன் கோவிலுக்கு வந்த ஒருவர் அருள் வந்து கோவில் கிணற்றுக்குள் சாமி சிலைகள் இருப்பதாகவும், அதை தோண்டி எடுக்க வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் மூடப்பட்டு இருந்த கிணற்றை தோண்டினார்கள்.
சிறிது தூரம் தோண்டியதுமே அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளியேற்ற யாரோ கிணற்றின் வழியாக பெரிய குழாய் பதித்திருந்தது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தொடர்ந்து தோண்டினார்கள். சுமார் 10 அடிக்கு தோண்டியபோது கிணற்றின் பக்கவாட்டு சுவரில் பதிக்கப்பட்டு இருந்த குழல் ஊதும் கண்ணன் கற்சிலை, 2 அன்னப்பறவைகளின் கற்சிலை, 2 பெண் தெய்வங்களுடன் கூடிய ஆண் காவல் தெய்வத்தின் கற்சிலை தெரிந்தது. சிலைகளை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள். உடனே கிணற்றில் இருந்து 3 சிலைகளும் மேலே கொண்டு வரப்பட்டன. அப்போது திடீரென கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் கிணறு தோண்டுவதை நிறுத்தினார்கள்.
வருவாய்த்துறையினர் தடை
கிணற்றுக்குள் இருந்து சிைலகள் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் காட்டுத்தீயாய் பரவியது. இதனால் அங்கு மழையிலும் வேடிக்கை பார்க்க பொதுமக்கள் திரண்டுவிட்டார்கள். சிலர் மீட்கப்பட்ட சிலைகளுக்கு பூவைத்து வணங்கினார்கள்.
இந்தநிலையில் இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை தாசில்தார் குமரேசன், வருவாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தார்கள்.
பின்னர் பொதுமக்களிடம் உரிய அனுமதி இல்லாமல் யாரும் இனி கிணற்றை தோண்டக்கூடாது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் பழங்காலத்தில் செதுக்கப்பட்டவையா? என்று அறிந்துகொள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள் இங்கு வந்து ஆய்வு நடத்துவார்கள். அதுவரை யாரும் சிலைகளை எடுத்துச்செல்லக்கூடாது என்று கூறினார்கள். அதனால் மீட்கப்பட்ட சிலைகள் அங்கேயே போடப்பட்டுள்ளன.
குறைபாடானா சிலைகளா?
இதுபற்றி அந்த பகுதியில் வசிக்கும் முதியவர்கள் கூறும்போது, 'பல ஆண்டுகளுக்கு முன்னால் மூடப்பட்ட இந்த கிணறு நல்ல நிலையில் இருந்தது. அம்மனுக்கு அபிஷேகம் செய்ய இங்கிருந்து தண்ணீர் கொண்டு செல்வார்கள். திருவிழா நாட்களிலும் இங்கிருந்து புனிதநீர் கொண்டு செல்லப்படும். புனிதநீர் எடுத்துச்செல்லப்படும்போது கிணற்றில் பதிக்கப்பட்டு இருந்த சாமி சிலைகளுக்கும் பூஜைகள் நடக்கும்' என்றார்கள்.
மற்றொரு தரப்பினர் கூறும்போது, 'சிற்பிகள் செதுக்கும்போது சிலையில் குறைபாடு ஏற்பட்டு விட்டால் அவைகளை கோவில் கிணற்றின் பக்கவாட்டில் வைத்து பொருத்திவிடுவார்கள். அதுபோன்ற சிலைகளாகவும் இது இருக்கலாம்' என்றார்கள்.