வாலாஜாபாத் அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
வாலாஜாபாத் அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.;
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தின் ஏரிக்கரையில் பழமை வாய்ந்த பீமேஷ்வரர் கோவில் உள்ளது. இது சேதமைடைந்து காணப்பட்டது. இந்த கோவிலை புதுப்பித்து சீரமைக்க கிராம மக்கள் முடிவு செய்து பணிகள் தொடங்கப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளது. திருப்பணி குழுவை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் சுரேஷ் ஆகியோர் அளித்த தகவலை தொடர்ந்து வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் தலைமையில் ஆய்வு செய்ததில் அங்கு 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த 2 கல்வெட்டுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
முதல் கல்வெட்டு கோவில் கருவறைக்கு நேர் எதிரே லிங்க திருமேணியை வணங்கும் விதத்தில் ஆண், பெண் உருவம் கொண்ட புடைப்பு சிற்பமும், இந்த உருவங்களின் தலைக்கு மேலே 4 வரிகளும், பாதத்திற்கு கீழே 8 வரிகளுமாக மொத்தம் 12 வரிகள் கொண்ட கல்வெட்டு ஒரே கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.
முதல் சில வரிகள் சிதைந்துள்ளது. எஞ்சிய வரிகள் மூலம் கொத்தம் வெங்கப்ப செட்டி கொநெரி செட்டி என்பவர் செய்த உபயம் என அறிய முடிகிறது. இதில் காணப்படும் சிற்பங்களான பெண்ணின் தலையில் இடப்பக்கம் கொண்டை, காதுகளில் அணிகலன்களும், கழுத்தில் சரப்பள்ளி ஆபரணம், கைகளில் மணிக்கட்டில் காப்புகளும், புஜங்களில் வளையங்களும், இரு கைகளை கூப்பிய நிலையிலும், இடுப்பில் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடிய பெண் ஆடை போன்றவை செதுக்கப்பட்டுள்ளது.
ஆண் உருவத்தின் நெற்றிப்பட்டையில் மணிகளுடன் கூடிய ஆபரணம், காதில் கடுக்கண், கழுத்தை ஒட்டிய நிலையில் ஆபரணமும், கழுத்திலிருந்து மார்பு வரை அழகிய வேலைப்பாடுகளுடன் ஒரு ஆபரணமும், வளையங்களுடன் கூடிய இரு கைகள் கூப்பியவாறும், இடுப்பில் முடிச்சுகளுடன் கூடிய ஆடை கால்கள் வரை நீண்டுள்ளது.
2-வது கல்வெட்டு கோவில் நுழைவாயிலின் வலப்புறம் உள்ள சுவற்றில் உள்ளது. இது பலமுறை வண்ணம் தீட்டப்பட்டு மறைந்து இருந்ததை ஆய்வு மையத்தலைவர் அஜய்குமார் கண்டுபிடித்து சுத்தம் செய்தபின் அதிலும் ஒரு தமிழ் கல்வெட்டு இருப்பது உறுதியானது.
இந்த இறைவனின் பெயர் தற்போது பீமேஷ்வரர் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் கல்வெட்டின் படி விமுனாதசுவாமி என அறியமுடிகிறது. இதில் விளம்பி வருடம் சித்திரை மாதம் ராசாம்பேட்டை ஆயிரங்காத்தான் என்பவர் இந்த கோவிலுக்கு செய்த தானத்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டு தகவல்களை தொல்லியல் துறையை சேர்ந்த உதவி கல்வெட்டாய்வாளர் நாகராஜன், உதவி தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோரும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் இக்களபணியின்போது ஆய்வு மையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நிர்மல்குமார், சஞ்சய் ஆகியோரும் உடன் இருந்தனர். சமீப காலமாக பழம்பெருமை வாய்ந்த கோவில்கள் பொதுமக்களால் புனரமைக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அமைக்கும்போது அறியாமை காரணமாக கல்வெட்டுக்கள் மீது வண்ணம் தீட்டுவது, கல்வெட்டு அமைந்துள்ள கற்களை இடம் மாற்றி அல்லது வரிசை மாற்றி கட்டுவது உள்ளிட்ட செயல்கள் அதிக அளவில் நடைபெறுகிறது.
இதை தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை மற்றும் கட்டுமான தொழிலாளார் நலத்துறையினர் இணைந்து வரலாற்று சான்றுகளாக விளங்கும் இந்த அரிய பொக்கிஷங்களை எப்படி பாதுகாப்பது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் கேட்டு கொண்டுள்ளார்.