மதுரை ஆண்டார்கொட்டாரத்தில் 13-ம் நூற்றாண்டு வணிகர்களின் கல்வெட்டு கண்டெடுப்பு
மதுரை ஆண்டார் கொட்டாரத்தில் 13-ம் நூற்றாண்டு வணிகர்களின் கல்வெட்டு கண்டறியப்பட்டு, அருங்காட்சியகத்தின் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.;
மதுரை ஆண்டார் கொட்டாரத்தில் 13-ம் நூற்றாண்டு வணிகர்களின் கல்வெட்டு கண்டறியப்பட்டு, அருங்காட்சியகத்தின் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வணிக குழு கல்வெட்டு
மதுரை கிழக்கு வட்டாரத்தில் உள்ள பாப்பாக்குடி கிராமம் ஆண்டார் கொட்டாரம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு வயற்காட்டில் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட வணிகா்குழு கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலமடை கிராம நிா்வாக அலுவலா் இளங்குமரன் தகவலின் அடிப்படையில் மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் மருதுபாண்டியன் இந்த கல்வெட்டு குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன், பாண்டிய நாட்டு வரலாற்று மைய ஆய்வாளா்கள் உதயகுமார், முத்துப்பாண்டி ஆகியோர் இக்கல்வெட்டை படி எடுத்தனர். கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் குறித்து மூத்த வரலாற்று ஆய்வாளர் சாந்தலிங்கம் கூறியதாவது:-
இந்த கல்லை அந்த பகுதி மக்கள் முனியன்கல்லு என அழைக்கின்றனா். 4½ அடி உயரமுள்ள இக்கற்பலகையின் 3 புறமும் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. மொத்தம் 47 வரிகளை கொண்டுள்ளது. இந்த கல்வெட்டின் முதல் 6 வரிகள் கிரந்த எழுத்துக்களில் சமஸ்கிருதத்தில் வணிகா்களின் மெய்க்கீா்த்தியை கூறுகிறது. கல்வெட்டு சமஸ்தபுவனாசார்ய பஞ்ச சதவீரசாசனம் என்று சாசனம் குறிப்பிடுகிறது. அதாவது ஐநூற்றுவா் என்னும் வணிகக்குழுவினா் அளித்த சாசனம் என்பது இதன் பொருளாகும்.
13-ம் நூற்றாண்டு
இதில் வணிகா்கள் தங்களை அய்யப்பொழில் பரமேஸ்வரியின் மக்கள் என்று கூறி கொள்கின்றனர். பல வணிகக்குழுக்கள் ஒன்று கூடி சமயத்தன்மை என்கிற தங்களது தொழில் தா்மத்தை நடத்துகின்றனா். நகரம், கிராமம், மணிக்கிராமம், கோழிக்குறிச்சி, கடிகைத்தாவளம், ஏறுசாத்து, இறங்குசாத்து (ஏற்றுமதி, இறக்குமதி) வணிகா்களுமான திசையாயிரத்து ஐநூற்றுவா் என்ற குழுவினா் பறப்பு நாட்டுப்பிரிவுக்குள் அடங்கிய இளமைநல்லூர் என்ற ஊரை சோ்ந்த வணிக வீரா்கள் இவ்வூரில் ஒரு வணிகத்தாவளத்தை ஏற்படுத்தி காவல் புரிந்து வணிகா்களுக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளனா்.
இளமைநல்லூர் என்பதற்கு நானாதேசி நல்லூர் என்று மற்றொரு பெயரும் வழங்கப்பட்டுள்ளது. இளமைநல்லூர் என்பதே இன்று இளமனூர் என்ற ஊராக இருக்கலாம் என தெரிகிறது. பதினெட்டுபட்டிணத்து பதினெண்விசையத்தார் என்ற பெருங்குழுவினா் வணிகவீரா்களை கொண்டு வீரத்தாவளம் அமைத்து வணிகம் செய்துள்ளனா். தாவளம் என்பது காவல் அரண்மிக்க தங்குமிடமாகவும், சரக்குப் பெட்டகம்(குடோன்) ஆகவும் செயல்பட்ட இடமாகும். முக்கியத்துவம் வாய்ந்த இக்கல்வெட்டு மதுரைக்கு அருகில் கிடைத்திருப்பது வரலாற்று அறிஞா்களுக்கு வியப்பை தந்துள்ளது.
இதற்கு முன்பு நத்தம், கோவில்பட்டி, சத்திரபட்டி, சிவகங்கை மாவட்டம் திருமலை, பிரான்மலை போன்ற இடங்களில் இத்தகைய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. கி.பி.13-ம் நூற்றாண்டில் அரசர்களின் ஆதரவை எதிர்பார்க்காமல் தன்னிச்சையாக வணிகர்கள் செயல்பட்டுள்ளனா் என்பதை இக்கல்வெட்டு உணா்த்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.