ஆம்புலன்சில் வந்து பார்வையிட்ட மாற்றுத்திறனாளி பெண்
புத்தக திருவிழாவை ஆம்புலன்சில் வந்து மாற்றுத்திறனாளி பெண் பார்வையிட்டார்.;
மாற்றுத்திறனாளி பெண்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கொத்தம்பட்டியை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம்-வாசுகி தம்பதி. இவர்களுக்கு சுகுணா (வயது33), சுகந்தி (30) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். 2 பேரும் மாற்றுத்திறனாளிகள். சுகந்திக்கு திருமணமாகிவிட்டது. முடக்குவாத தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சுகுணா, பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.
8-ம் வகுப்புவரை படித்துள்ள சுகுணா சிறு வயது முதல் புத்தக வாசிப்பில் மிகுந்த ஆர்வமுடையவராக உள்ளார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவிதைகளை எழுதி வருகிறார். கவிதைக்காக இதுவரை 270 சான்றிதழ்களும், 2 விருதுகளும் பெற்றுள்ளதாக கூறுகிறார். இந்நிலையில், புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவிற்கு வரவேண்டும் என்ற ஆசையை சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிட்டுள்ளார்.
அரங்குகளை பார்வையிட்டார்
இதனை தொடர்ந்து தனியார் ஆம்புலன்சு உதவியுடன் சுகுணாவை இன்று புதுக்கோட்டை புத்தக திருவிழாவிற்கு ஒருங்கிணைப்பாளர்கள் அழைத்து வந்தனர். ஸ்ட்ரெச்சரில் அவர் இருந்தப்படியே புத்தக அரங்குகளை பார்வையிட்டார். அவருக்கு ஏராளமான புத்தகங்களை பலரும் பரிசளித்தனர். சுகுணா கூறுகையில், 10 ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கி கிடந்த என்னை புத்தக திருவிழாவில் பங்கேற்க வைத்த அனைவருக்கும் நன்றி. இது என்னை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. எனக்கு பிடித்த ஏராளமான புத்தகங்களை பலரும் வாங்கிக்கொடுத்தது எனக்கு மேலும் ஊக்கத்தை அளித்துள்ளது.
தொடர்ந்து வாசிப்பதும், எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மிகவும் வறுமையில் வாடும் எனது நிலையை கருத்தில்கொண்டு ஏதாவது ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றார். சுகுணாவின் தாயார் வாசுகி கூறுகையில், கூலி வேலையும் சிறிதளவு விவசாயம் செய்து வரும் தங்களுக்கு தமிழ்நாடு அரசு போதிய உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்தார். மாற்றுத்திறனாளி பெண் வந்து புத்தக திருவிழாவை ஆர்வமுடன் பார்வையிட்டது அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.