நேரடி நெல் கொள்முதல் நிலைய குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை - கலெக்டர் தகவல்

நேரடி நெல் கொள்முதல் நிலைய குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;

Update:2022-09-14 14:59 IST

விவசாயிகளின் நலன் கருதி ஏற்கனவே நடைமுறையில் இருந்த அதாவது 1.10.2022-ல் திறக்கப்பட இருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முன்கூட்டியே 1.9.2022 முதல் திறக்க தமிழக அரசு மூலம் உத்தரவிடபட்டிருந்தது. அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கே.எம்.எஸ். 2022-2023 சொர்ணாவாரி கொள்முதல் பருவத்தில் தற்போது மதுராந்தகம், வையாவூர், படாளம், குன்னங்குளத்தூர், கருங்குழி, பூதூர், கருங்குழி, வீராணக்குன்னம், ஓரத்தி, கீழ்அத்திவாக்கம், பெரும்பாக்கம், செண்டிவாக்கம், திருக்கழுக்குன்றம், பொன்விளைந்த களத்தூர், பொன்பதர்கூடம், மாமல்லபுரம், நத்தம்கரியச்சேரி, எடையாத்தூர், செய்யூர், சூனாம்பேடு, புத்திரன்கோட்டை, செய்யூர் அம்மனூர், லத்தூர், சோழக்கட்டு, சித்தாமூர், பொலம்பாக்கம், செங்கல்பட்டு, பாலூர், வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,160 (அடிப்படை ஆதார விலை ரூ.2060 மற்றும் தமிழக அரசின் ஊக்கத்தொகை ரூ.100) எனவும் அதாவது கிலோ ஒன்றுக்கு ரூ.21.60 என்றும், பொது ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,115 (அடிப்படை ஆதார விலை ரூ.2,040 மற்றும் தமிழக அரசின் ஊக்கத்தொகை ரூ.75) எனவும் அதாவது கிலோ ஒன்றுக்கு ரூ.21.15 என்றும் வழங்கப்படும்.

விவசாயிகளிடமிருந்து ரூ.17 ஈரப்பதத்திற்குட்பட்ட நெல் மட்டும் கொள்முதல் செய்யப்படும். விவசாயிகள் மேற்கண்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது சிட்டா, கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட அடங்கல், உதவி வேளாண்மை அலுவலர் அளிக்கும் மகசூல் சான்று, ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக ஜெராக்ஸ், நெல்லின் மாதிரி போன்றவற்றுடன் சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்று நெல்லை விற்பனை செய்திட முன்பதிவு செய்து தங்களது ஒதுக்கீடு செய்யப்பட்ட தினத்தில் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு எடுத்து சென்று விற்பனை செய்து பயனடையலாம்.

மேலும், 30.8.2022 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் தொடர்பான விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு தீர்வு காண கட்டுபாட்டு அறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்து நேரில் வருவதை தவிர்த்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக இலவச தொலைபேசி எண்: 18005993540, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்: 044-26421663, 044-26421665 மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்: 044-27427412 044-27427414 மற்றும் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்-அப் எண்: 9444272345 போன்றவற்றில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம்.

விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்