தமிழில் பட்டயப்படிப்பு தொடங்கப்படும்

நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில், தமிழில் பட்டயப்படிப்பு தொடங்கப்படும் என துணைவேந்தர் சுகுமார் கூறினார்.;

Update: 2023-02-27 18:45 GMT

நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில், தமிழில் பட்டயப்படிப்பு தொடங்கப்படும் என துணைவேந்தர் சுகுமார் கூறினார்.

மாநாடு

டெல்லியில் உள்ள வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம் சார்பில் வேளாண் அறிவியல் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் விவசாய பல்கலைக்கழகங்களாகிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடந்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டிற்கான 8-வது வேளாண் அறிவியல் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் 2 நாட்கள் நடந்தது.

தமிழில் பட்டயப்படிப்பு

மாநாட்டை மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், சங்க கால இலக்கியங்களில் மீன்வளர்ப்பு மற்றும் மீன் பதனிடுதல் பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன. நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் வருங்காலத்தில் தமிழில் பட்டயப்படிப்பு தொடங்க உள்ளது என்றார்.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வக்குமார் பேசுகையில், வேளாண் அறிவியல் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்துவதன் மூலம் புதிய ஆராய்ச்சி முடிவுகளை உடனுக்குடன் பண்ணையாளர்கள் எளிதில் புரிந்து கொள்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வருகிறது என்றார்.

விருதுகள்

நிகழ்ச்சியில் 576 ஆராய்ச்சி கட்டுரைகள் தமிழில் வாசிக்கப்பட்டது. சிறந்த கட்டுரைகளுக்கு விருதுகளை மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் வழங்கினார். வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத்தின் மூலம் சிறந்த கல்லூரி, சிறந்த இயக்குனர், சிறந்த ஆசிரியர் என பல விருதுகள் வழங்கப்பட்டன.

டெல்லி வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத்தின் நிறுவனர் முத்தமிழ்செல்வன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலச்சந்திரன், நாகை மீன்வள பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினர்.

முன்னதாக தலைஞாயிறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பாலசுந்தரி வரவேற்றார். வேளாண் அறிவியல் தமிழ் இயக்க பொதுச்செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்