'தினத்தந்தி' செய்தி எதிரொலி: அரியலூரில் தெரு நாய்களை பிடிக்கும் பணி தொடங்கியது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக அரியலூரில் தெரு நாய்களை பிடிக்கும் பணி தொடங்கியது. மேலும், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி முகாம் 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.;
கருத்தடை அறுவை சிகிச்சை
அரியலூர் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக 'தினத்தந்தி'யில் தொடர்ந்து செய்தி வெளிவந்தது. இதையடுத்து, அரியலூர் நகராட்சியில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் நகராட்சியில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் தற்போது நடைபெற்று வருகிறது. அரியலூர் நகராட்சியில் தெரு நாய்களுக்கு கடந்த 3-ந்தேதி தொடங்கிய கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் வருகிற 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.
120 தெரு நாய்கள்
இதுவரை அரியலூர் நகராட்சி பகுதிகளில் 120 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு வாகனத்தின் மூலம் பாதுகாப்பாக கீழப்பழுவூரில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் அமைக்கப்பட்டுள்ள நாய்கள் கருத்தடை செய்வதற்கான மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நகராட்சியின் சார்பில் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணியும் பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டது. அரியலூர் நகராட்சியில் மீதமுள்ள அனைத்து தெரு நாய்களும், முகாம் நடைபெறும் மற்ற நாட்களில் பிடிக்கப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
அரியலூர் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், இதுபோன்ற பிற நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.