'தினத்தந்தி' செய்தி எதிரொலி: நெல்லை ரெயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர் திறப்பு
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லைரெயில் நிலையம்
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் பழம் பெருமை வாய்ந்தது ஆகும். இங்கிருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் உள்பட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், பாசஞ்சர் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, கோவை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கு இடையேயும், மும்பை, பெங்களூரு உள்பட பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுதவிர நெல்லையில் இருந்து ஈரோடு, திருச்செந்தூர், செங்கோட்டை, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு பாசஞ்சர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்று வருகின்றன. இவ்வாறு நெல்லையில் இருந்தும், நெல்லை வழியாகவும் 70-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
புதிய நடைமுறையால் குழப்பம்
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பழைய பிரதான நுழைவு வாசல் பகுதியில் முன்பதிவு இல்லாத 2 டிக்கெட் கவுண்ட்டர்களும், புதிய நுழைவு வாசல் பகுதியில் 2 முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்களும் செயல்பட்டு வந்தன.
இந்த நிலையில் புதிய நுழைவு வாசலில் இருந்த 2 முன்பதிவு கவுண்ட்டர்களில் ஒரு கவுண்ட்டர் மூடப்பட்டது. அந்த கவுண்ட்டர் பழைய நுழைவு வாசல் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு, 3 கவுண்ட்டர்களாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து கவுண்ட்டர்களிலும் முன்பதிவு டிக்கெட்டும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளும் எடுத்துக் கொள்ளலாம் என்ற புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வந்தது. இது பயணிகளுக்கு கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒரே கவுண்ட்டரில் 2 வகையான டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.
கூடுதல் கவுண்ட்டர் திறப்பு
இதுதொடர்பாக 'தினத்தந்தி'யில் கடந்த 4-ந்தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் பிரதான பழைய நுழைவு வாசலில் நேற்று கூடுதலாக ஒரு டிக்கெட் கவுண்ட்டர் திறக்கப்பட்டது. அந்த கவுண்ட்டரில், பயணிகள் குழப்பம் அடையாமல் இருக்கும் வகையில் முன்பதிவுக்கு மட்டும் என்று அறிவிப்பு ஒட்டப்பட்டு உள்ளது. இதன்மூலம் முன்பதிவுக்கு ஒரு கவுண்ட்டர் கிடைத்து உள்ளது. மற்ற 3 கவுண்ட்டர்களில் ஒரு கவுண்ட்டர் ஏற்கனவே இருந்தபடி முன்பதிவு இல்லாத உடனடி டிக்கெட் மட்டும் வழங்கும் கவுண்ட்டராக மாற்றப்பட்டு உள்ளது. மீதமுள்ள 2 டிக்கெட் கவுண்ட்டர்களும் பயணிகளின் வருகை, கூட்டத்தின் அடிப்படையில் தேவையான டிக்கெட் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
புதிய நுழைவு வாசலில் உள்ள ஒரேயொரு கவுண்ட்டரில் முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நெல்லை ரெயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர் திறந்து பயணிகள் குழப்பத்தை தீர்க்க ரெயில்ேவ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த ரெயில்வே அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.