தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து விருதுநகருக்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ளவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவகாசி.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சுழி.
சேதமடைந்த கட்டிடம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தெற்கு ரத வீதியில் உள்ள மசூதிக்கு எதிரில் உள்ள நகர்மன்ற கூட்ட அரங்கம் சேதமடைந்து செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார்், சாத்தூர்.
பயணிகள் அவதி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் புதிதாக கட்டுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. தற்காலிகமாக பஸ்கள் நிற்கும் இடங்களில் நிழற்குடை மற்றும் கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோபால கிருஷ்ண ராஜா, ராஜபாளையம்.
பாதுகாப்பு சுவர் வேண்டும்
விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மருளூத்து மற்றும் பட்டம்புதூர் கிராமங்களுக்கு இடையே உள்ள கண்மாயில் நூற்றுக்கணக்கான மான்கள் வாழ்கின்றன. கோடைக்காலத்தில் தண்ணீருக்காக தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது அவை வாகனங்களால் அடிபடுகின்றன. எனவே வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கண்மாயில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். மேலும் அவற்றிற்கு தண்ணீர்த்தொட்டிகளும் ஆங்காங்கே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தரமூர்த்தி, விருதுநகர்.