'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

Update: 2022-09-09 17:47 GMT

சேதமடைந்த நிழற்குடை

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நிழற்குடையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள நிழற்குடையால் பொதுமக்கள் பலர் இதனை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரணி குமார், திருப்புல்லாணி.

குவிந்து கிடக்கும் குப்பை

ராமநாதபுரம் நகரில் பல இடங்களில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. மேலும், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ராமநாதபுரம்.

பயணிகள் நிழற்குடை வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் தெற்குத்தரவை பஞ்சாயத்து வைரவன்கோவில் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இங்கு வரும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் முதியோர், கர்ப்பிணிகள் நீண்ட நேரம் வெயில் மற்றும் மழையில் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. பயணிகளின் நலன்கருதி இங்கு நிழற்குடை அமைக்க வேண்டும்.

அன்புமணி, வைரவன்கோவில்.

பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்கள்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மடை பஞ்சாயத்து வன்னிக்குடி கிராமத்தில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதுடன் சிலரை கடித்தும் விடுகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேஷ், ஆர்.எஸ்.மடை.

போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகனூர் ஊராட்சி சத்திரக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. போக்குவரத்து இடையூறுகளில் சிக்கி வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துபாண்டி, போகலூர். 

Tags:    

மேலும் செய்திகள்