தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெற்குமாதவி கிராமத்தில் மருதையாற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதினால் ஆற்றில் செல்லும் தண்ணீர் மாசுபடுவதுடன், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நாய்கள் தொல்லை
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூரில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
போக்குவரத்திற்கு இடையூறு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பஸ் நிறுத்தம் அருகில் பெரிய அம்மாபாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலையின் வலது புறம் உள்ள கடைகள் முன்பு இருசக்கர வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்துவால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே வாகனங்களை அங்கு நிறுத்த குன்னம் போலீசார் தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்
மேம்பாலம் அமைக்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை எதிரே கல்லாற்றின் குறுக்கே பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் குறுகலான பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தில் ஒரே சமயத்தில் 2 வாகனங்கள் ஒதுங்கி செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மேம்பாலம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொது குடிநீர்குழாய் ஏற்படுத்தி தரப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம் , துறையூர்-பெரம்பலூர் மெயின்ரோட்டில் லாடபுரம் பிரிவுச் சாலையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆழ்துளைக்கிணறுகளில் உள்ள நீர் உப்பு நீராக இருப்பதால் பயன்படுத்த முடியவில்லை. கோடைக்காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விடுகிறது. அதனால் விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, லாடபுரம் வழியாக அம்மாப்பாளையம் செல்லும் காவிரி குடிநீர் குழாயில் பொது குடிநீர் குழாய் இணைப்பு ஒன்று கொடுத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.