தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
மயானத்திற்கு சாலை அமைக்க கோரிக்கை
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கூத்தங்குடி ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி மக்கள் பயன்படுத்துவதற்கு மயான சாலை இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். வயல் வரப்புகளை கடந்து மயானத்திற்கு பூத உடல்களை எடுத்துச்செல்லும் அவலநிலையில் உள்ளோம். எனவே எங்களுக்கு மயான சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கூத்தங்குடி.
சிதிலமடைந்த படிகள் சரிசெய்யப்படுமா?
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், த.சோழன்குறிச்சி கிராமத்தில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே உள்ள பெரிய ஏரியில் பெண்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்த 4 படித்துறைகள் கடந்த 5 ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
முத்தமிழ்ச்செல்வன், த.சோழன்குறிச்சி.
முறையான வடிகால் வாய்க்கால் வேண்டும்
அரியலூர் மாவட்டம், காவனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கா.அம்பாபூர் கிராமத்தில் காலனி தெருவில் இருந்து மயானம் கொட்டகை வரை கப்பி சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து கொண்டு வருகிறது. இந்த கப்பி சாலை பஞ்சாயத்து நிதியுதவி மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலனி தெரு பகுதியில் இருந்து மயானக் கொட்டகை பகுதி வரை இருபுறமும் உள்ள நீர் வரத்து வாய்க்காலை சரியாக அகலப்படுத்தவில்லை. மேலும் நீர்நிலை பகுதிகளை சரியாக தூர்வாரமல் இருப்பதாலும், சிலஇடங்களில் மட்டும் பள்ளம் தோண்டி உள்ளதால், மழைநீரும், கழிவுநீரும் ஒன்றாக கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கா.அம்பாபூர்.
தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் அச்சம்
அரியலூர் மாவட்டம், திருமானூர் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலை தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் குழந்தைகள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருமானூர்.
அடிப்படை வசதிகள் இன்றி காணப்படும் பஸ் நிலையம்
அரியலூர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பயணிகளின் அடிப்படைத் தேவையான இலவச கழிப்பறை வசதி மற்றும் அவர்கள் அமர்வதற்கான இருக்கைகள் போதுமான அளவு இல்லாமல் உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள், பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நவின்குமார், அரியலூர்.