தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-16 18:58 GMT

வாகன ஓட்டிகள் அவதி

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் இருந்து செயற்கை மணலை ஏற்றிக் கொண்டு சிறிய லாரி முதல் பெரிய லாரி வரை செல்கின்றன. லாரிகளில் பாடி மட்டத்திற்கு மேல் செயற்கை மணலை ஏற்றிச்செல்லும்போது லாரியின்மேலே தார்பாய்கள் போட்டு மூடாமல் செல்வதால் லாரியில் உள்ள மணல் பறந்து சென்று லாரியின் பின்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களில் பட்டு, அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுப்பிரமணி, புன்னம் சத்திரம்.

குண்டும், குழியுமான தார்சாலை

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி, ஓலப்பாளையம் அருகே அதியமான் கோட்டையில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் மெயின் சாலைக்கு செல்வதற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை போடப்பட்டது. தற்போது இந்த தார்சாலை நெடுகிலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதன் காரணமாக இந்த வழியாக இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த தார் சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தமிழரசன், அதியமான்கோட்டை.

குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி

கரூர் வெங்கமேடு பிள்ளையார் கோவில் அருகே சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் உடைந்ததால் அதனை சரி செய்ய பள்ளம் தோண்டப்பட்டது. பணி முடிந்தும் இந்த பள்ளம் இன்னும் மூடப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் இந்த பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வெங்கமேடு., வெங்கமேடு, கரூர்.

பயனற்ற சுகாதார வளாகம்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள சேமங்கி செல்வநகரில் அப்பகுதி பெண்களின் நலன் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்நிலையில் சுகாதார வளாகத்திற்குள் உள்ள கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நின்றது. இதன் காரணமாக பெண்கள் இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். இதன் காரணமாக சுகாதார வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்திற்குள்ளிருந்து கழிவுநீர் செல்ல முடியாமல் உள்ளதை சீரமைத்து பெண்களின் பயன்பாட்டிற்கு விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தமிழரசன், சேமங்கி.

Tags:    

மேலும் செய்திகள்