தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-08-12 18:32 GMT

பயன்படுத்த முடியாத மகளிர் சுகாதார வளாகம்

புதுக்கோட்டை மாவட்டம், குப்பையன்பட்டி ஊராட்சியில் மந்தை பிடாரியம்மன் கோவில் அருகே மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தில் மேற்குறைகளில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும், கழிவறைகளில் உள்ள பீங்கான்கள் உடைந்தும், கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இதனால் சுகாதாரமற்ற முறையில் பாழடைந்து கழிவறை இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ெபாதுமக்கள், குப்பையன்பட்டி.

பயன்பாட்டிற்கு வராத கழிவறை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 400 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவ-மாணவிகளின் பயன்பாட்டிற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கழிவறை கட்டப்பட்டது. ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு திறந்து விடவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் சாலையை கடந்து வெட்டவெளியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலன்கருதி புதிதாக கட்டபட்டுள்ள கழிவறையை திறந்து பயன்பாட்டிற்கு விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருமணஞ்சேரி.

கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது, செல்ல வழி இன்றி சாலையோரத்திலும், சாலையில் உள்ள பள்ளங்களிலும் தேங்கி நிற்கின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிவமுருகன், திருமயம்.

சிமெண்டு பூச்சுகள் கொட்டும் கட்டண கழிவறை

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டண கழிவறை ஒன்று இலுப்பூர் பஸ் நிலையத்தில் உள்ளது. இந்த கழிவறை கட்டிடத்தில் ஆங்காங்கே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இடிந்துகொட்டுகிறது. இந்த கழிவறைக்குள் செல்பவர்கள் கட்டணம் செலுத்திவிட்டு பயந்து கொண்டே உள்ளே சென்று பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. சில நேரங்களில் பொதுமக்கள் கழிவறைக்குள் இருக்கும்போது மேலிருக்கும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து மேலே விழுந்து காயங்கள் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், இலுப்பூர்.

நோய் பரவும் அபாயம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி குடியிருப்பு பகுதியில் ஆட்டு இறைச்சி கடை வைக்கப்பட்டுள்ளது. இந்த கடையில் வெட்டப்படும் ஆட்டின் ரத்தம் அருகே பள்ளம் தோண்டி அதில் விடப்படுகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், முக்கண்ணாமலைப்பட்டி.

Tags:    

மேலும் செய்திகள்