பழுதடைந்த நிலையில் உள்ள கிளை நூலக கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்
சந்தவாசல், படவேடு ஊராட்சிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கிளை நூலக கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே சந்தவாசல், படவேடு ஊராட்சிகளில் கிளை நூலகக் கட்டிடங்கள் உள்ளன. இந்த 2 கட்டிடங்களும் பழுதடைந்த நிலையில் உள்ளன. மழைக்காலத்தில் மழைநீர் உள்ளே தேங்கி நிற்கும் அவலநிலை உள்ளது.
இதனால் படவேடு ஊராட்சி கிளை நூலகம் தற்காலிகமாக படவேடு கமண்டல நதி மேம்பாலம் அருகே பீமலிங்கேஸ்வர் மலையடிவாரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சந்தவாசல் நூலக கட்டிடத்தில் ஆலமரம் வளர்ந்து வருவதால் இடியும் நிலையில் உள்ளது.
எனவே, மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள நூலகக் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தி, புதிய நூலகக்கட்டிடங்கள் தரவேண்டும் என வாசகர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.