வெவ்வேறு சம்பவம்: வாலிபர் உள்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

நச்சலூர் பகுதியில் வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர் உள்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-12-01 19:22 GMT

வாலிபர் தற்கொலை

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள முதலைப்பட்டி போரைக்களான் கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 39). இவருக்கு தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த செல்வக்குமார் சம்பவத்தன்று வயலுக்கு அடிக்கும் பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து வாந்தி எடுத்துள்ளனர்.

இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி சாவு

இதேபோல் நச்சலூர் அருகே உள்ள மேல்குறிச்சி பகுதியை சேர்ந்த பெரியசாமி. இவரது மனைவி மீனாட்சி (75). இந்தநிலையில் பெரியசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மீனாட்சி சம்பவத்தன்று பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனாட்சி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மீனாட்சி மகன் சந்திரசேகரன் கொடுத்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் நாமக்கல் மாவட்டம், க.பரமத்தி வேலூர் செருக்கலை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி முத்துலெட்சுமி (60). இவர் கடந்த ஓரு ஆண்டாக கணவனை பிரிந்து மகன் சந்தானத்துடன் கரூர் மாவட்டம், இனுங்கூர் புதுப்பட்டியில் வசித்து வந்தார். இந்தநிலையில் நடராஜன் கால்கள் மற்றும் கண் பார்வை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 20-ந்தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்கும் குருணை மருந்தை நடராஜன் சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்தும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்