துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது நேர்ந்த பரிதாபம்மரத்தில் கார் மோதி தொழிலாளி பலி 11 பேர் படுகாயம்

Update: 2023-05-08 19:00 GMT

பர்கூர்:

பர்கூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற கார் மரத்தில் மோதி தொழிலாளி பலியானார். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

மரத்தில் மோதியது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மேசன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் பாஷா (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் தனது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த 11 பேருடன் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு காரில் புறப்பட்டார். காரை ரபீக் என்பவர் ஓட்டி சென்றார். நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சின்ன மல்லப்பாடி என்ற இடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன்பகுதி முழுவதும் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். அவர்களின் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், பர்கூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் பழனி, பாலமுருகன், பொன்னுமணி, அன்புமணி, விக்னேஷ், ஆகியோர் தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணை

இதில் அப்துல் பாஷா பலத்த காயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் காயம் அடைந்த கவுசர் (45), ரபிக், அல்தாப் (22), அப்துல் (22), பாத்திமா (55), முகமது ஹமீது, அப்ரீன், அஸ்லம், முன்னி, முகமது, உசேன் ஆகிய 11 பேரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் விபத்துக்குள்ளான காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்