மத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி பெண் பலிபிணத்துடன் கிராம மக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

Update: 2023-04-21 19:00 GMT

மத்தூர்:

மத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் இறந்தது தொடர்பாக கிராம மக்கள் பிணத்தை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெண் சாவு

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கொடமாண்டபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது 40). இவர் கடந்த 16-ந் தேதி இரவு கொடமாண்டப்பட்டி- சிப்காட் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ரஞ்சிதம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா நேற்று இறந்தார்.

சாலை மறியல்

இதனை தொடர்ந்து இறந்த பெண்ணின் உடல் கொடமாண்டபட்டிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பிணத்துடன் கொடமாண்டப்பட்டி- சிப்காட் சாலையில் திரண்டனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளால் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றவரை கைது செய்யகோரியும், அப்பகுதியில் வேகத்தடை அமைக்ககோரியும் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து சமாதானம் அடைந்த கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கொடமாண்டப்பட்டி- சிப்காட் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்