எலச்சிபாளையம்:
மல்லசமுத்திரத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலியானார்.
நகை மதிப்பீட்டாளர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் கபிரியேல் (வயது 55). இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கிளாரா மேரி (51). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கிளாரா மேரிக்கு கடந்த 4-ந் தேதி முதல் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அச்சம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி கிளாரா மேரி இறந்தார். இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் கிளாரா மேரி பன்றிக்காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து மல்லசமுத்திரத்தில் உள்ள ஆசிரியர் காலனி பகுதியில் மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் கிருஷ்ணன் தலைமையில் டாக்டர்கள் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கிளாரா மேரியின் குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்தனர். மேலும் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர். பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.