பரமத்திவேலூர் அருகே கிணற்றில் விவசாயி உடல் மீட்பு போலீசார் விசாரணை

Update: 2022-12-18 18:45 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே கிணற்றில் விவசாயி உடல் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி

பரமத்திவேலூர் அருகே உள்ள படமுடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன். இவருடைய மகன் தங்கராசு (வயது 38). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. தங்கராசுவின் தாய், தந்தை ஏற்கனவே இறந்துவிட்டனர். இவருடைய தங்கை பிரியாவுக்கு திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார். தங்கராசுக்கு திருமணம் ஆகாததால் தனியாக வசித்து வந்த அவர் மனமுடைந்து தொடர்ந்து மது குடித்து வந்ததாக‌ தெரிகிறது.

கடந்த 2 நாட்களாக தங்கராசு வீட்டிற்கு வராததால் அவரை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விசாரணை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் மிதந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன தங்கராசு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்