முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ேதன் என்பதா?"நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்"-எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் சவால்

நான், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினேன் என்று சொல்வதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத்தயார் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால் விட்டுள்ளார்.

Update: 2022-10-20 20:08 GMT

நான், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினேன் என்று சொல்வதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத்தயார் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால் விட்டுள்ளார்.

தங்க கவசம்

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து நேற்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மக்களுக்கு எனது மனப்பூர்வமான தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தங்க கவசம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்ற கருத்துரை அடிப்படையில் நாங்கள் முடிவெடுப்போம்.

ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிலர் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த வழக்கு முடிவு பெறுகின்ற வரையில் நான் கருத்து கூற விரும்பவில்லை.

பொன்விழா

அ.தி.மு.க. தொண்டர்களுக்கான இயக்கம். தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை உருவாக்கினார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல தியாகங்களை செய்து இந்த இயக்கத்தை வழிநடத்தினார்.

கட்சியின் 50-வது ஆண்டு பொன்விழாவை தொண்டர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்ற நேரத்தில், பல விரும்பத்தகாத பிரச்சினைகளை யார் உருவாக்கினார்கள் என்பது நாட்டு மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும்.

இவ்வளவு பெரிய செயலை, பாவத்தை செய்துவிட்டு அடுத்தவர் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல. மெதுவாக ஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியது யார், நம்பிக்கை துரோகம் செய்தது யார்? என்று, அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். என்னைப்பற்றி தொண்டர்களுக்கு நன்றாக தெரியும். தொண்டர்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும். உரிய நேரத்தில் அவர்களை அணுகுவேன்.

தி.மு.க.வின் 'பி டீம்'

நான் தி.மு.க.வின்'பி டீம்' என சிலர் குறிப்பிடுகின்றனர். ஆரம்பத்தில் இருந்தே எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை என்ன என்பதை அனைவரும் கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள். யார் மீது குற்றம்? என்பதை தமிழக மக்கள் நன்றாக கணித்து வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பொத்தாம் பொதுவாக நான் சட்டசபையில் அரை மணி நேரம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதாக கூறியுள்ளார். அது முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது. நான் இதுவரை கடுமையான சொற்களை சொன்னதில்லை. நான் முதல்-அமைச்சரை, சந்தித்ததை அவர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயார். அவ்வாறு அவர் நிரூபிக்கத்தவறினால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலக தயாரா? என்று கேட்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்