வனப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் ராணுவ விமானம் விழுந்ததா?

வனப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் ராணுவ விமானம் விழுந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-28 20:21 GMT

செந்துறை,

பயங்கர வெடிச்சத்தம்

அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு வானில் 4 ராணுவ போர் விமானங்கள் தாழ்வாக பறந்து பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது செந்துறை அருகே உள்ள குழுமூர், வங்காரம், அயன்தத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் குழுமூர் மற்றும் வங்காரம் பகுதியில் உள்ள அரசு வனப்பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் கேட்டுள்ளனர். இதையடுத்து ராணுவ விமானம் விழுந்து வெடித்து சிதறிவிட்டது என்ற தகவல் காட்டுத் தீயாக பரவியது.

வனப்பகுதியில் தேடிய மக்கள்

இதைத்தொடர்ந்து சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் உள்ளிட்ட கிராம மக்கள் திரண்டு வந்து, வனப்பகுதியில் சல்லடை போட்டு தேடினர். இளைஞர்களும், பெண்களும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வனப்பகுதியில் சுற்றி, சுற்றி வந்து தேடினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும் பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த மக்களும் வனப்பகுதிக்கு திரண்டு வந்து தேடினர். இதனால் வங்காரம் வனப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக வலைத்தளங்களில் பதிவு

இந்த நிலையில் அப்பகுதி இளைஞர்கள் கொடுத்த தகவலின்பேரில் செந்துறை போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மூன்று 108 ஆம்புலன்சுகளும் வனப்பகுதிக்கு வந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வனப்பகுதியில் விமானம் விழுந்ததற்கான தடயங்கள் தென்படாததால், பலர் திரும்பி சென்றனர். ஆம்புலன்சுகளும் அங்கிருந்து சென்றன. ஆனால் மாலையில் ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின் புகைப்படத்துடன் வங்காரம் காட்டில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் மீட்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரப்பினர். இதனால் மேலும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அவை யாவும் வதந்தி என்று பொதுமக்களுக்கு தெரியவந்தது.

ஆய்வு நடத்த வேண்டும்

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதியிடம் கேட்டபோது, அதுபோல் எவ்வித விபத்தும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், வெடிச்சத்தம் கேட்டது உண்மை. இது நிலநடுக்கத்தால் ஏற்பட்டதா? அல்லது இப்பகுதியில் இயங்கி வரும் சிமெண்டு ஆலை சுரங்கங்களில் வைக்கப்பட்ட வெடியால் ஏற்பட்டதா? என்று புவியியல் துறையினர் ஆய்வு நடத்தி இப்பகுதி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்