அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பழமலைநாதபுரம் கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் 38 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பழமையான இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி கல்வித்துறை இந்த பள்ளியை மூடும் நிலைக்கு வந்தது. இந்த நிலையில் அங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் தீவிரமான மாணவர் சேர்க்கை செய்து பள்ளியை மீண்டும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து பள்ளியின் வைர விழாவை நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி ஒவ்வொருவரும் பள்ளிக்கு மற்றும் விழாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர். பழமலைநாத சுவாமி கோவிலுக்கு பின்புறம் நடந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களை தலைமையாசிரியர் வைத்திலிங்கம் வரவேற்றார். கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பள்ளி மாணவ-மாணவிகளை வாழ்த்தி பரிசு பொருட்கள் மற்றும் சான்றுகளை வழங்கி பாராட்டினர். பள்ளி மேலாண்மைக்குழு, கிராம இளைஞர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என அனைவரும் ஆண்டு விழாவிற்கு தேவையான உதவிகளை செய்து பள்ளியின் சிறப்புகளை எடுத்துக்கூறி ஆச்சரியப்படுத்தினர். பின்னர் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் உதவி ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினார்.