ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.;

Update: 2023-07-17 18:16 GMT

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.

பொதுவாக அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாடு மேற்கொள்ளப்படுவதுண்டு. இதில் ஆடி மாதம் வரும் அமாவாசையானது முன்னோர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் அதிக அளவிலான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பார்கள். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆடி அமாவாசை வரும் நிலையில் இந்த ஆண்டு 2 அமாவாசை வருகிறது. முதல் அமாவாசை நாளான நேற்று பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து கோவில்கள் மற்றும் ஆற்றங்கரைகளுக்கு சென்று தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். திருப்பூரில் பார்க் ரோட்டில் உள்ள ராகவேந்திரர் கோவில் உள்பட மாநகரில் உள்ள சில கோவில்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்கள் முன்னோர்களை மனதில் நினைத்து மந்திரங்கள் ஓதி பயபக்தியுடன் தர்ப்பணம் கொடுத்தனர்.

இந்த ஆண்டு 2 அமாவாசை என்பதால் முதல் அமாவாசை நாளுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று வழக்கமான கூட்டம் இல்லையென்றாலும் கோவில்களில் பொதுமக்கள் கூட்டம் ஓரளவு இருந்தது. பார்க் ரோட்டில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் அதிகாலை முதல் அதிகமான மக்கள் தர்ப்பணம் கொடுக்க வந்தனர்.

இதேேபால் பொதுமக்கள் பலர் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும், வீடுகளில் காகங்களுக்கு உணவு படைத்து முன்னோர் வழிபாட்டை மேற்கொண்டனர். ஆகஸ்டு 16-ந்தேதி வரக்கூடிய 2-வது ஆடி அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுப்பதற்கு மக்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்