அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் அருண்பாட்சா தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பார்த்திபன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மத்திய அரசு வழங்கும் அதே நாளில் தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியான 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.
ரெயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ரெயில் பயண கட்டண சலுகையை மத்திய அரசு உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.