மாவட்ட தலைவரை பதவியில் இருந்து நீக்கக்கோரிபா.ஜ.க.வினர் தர்ணா போராட்டம்
மாவட்ட தலைவரை பதவியில் இருந்து நீக்கக்கோரி பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாரதீய ஜனதா கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவராக இருப்பவர் கலிவரதன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தான் சார்ந்த கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஒருவருடன் செல்போனில் பேசினார். அப்போது கலிவரதன் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. கட்சியில் உள்ள நிர்வாகிகளை அந்த கட்சியின் மாவட்ட தலைவரே ஒருமையிலும், ஆபாசமாகவும் திட்டிய சம்பவம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாவட்ட தலைவர் கலிவரதனை கண்டித்தும், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் கடந்த 10-ந் தேதி விழுப்புரத்தில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகத்தின் வளாகத்தில் அக்கட்சி நிர்வாகிகள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் கலிவரதன் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்காததால், நேற்று மீண்டும் பா.ஜ.க.வினர், மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து, அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கட்சியின் மாவட்ட பொருளாளர் குமாரசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இப்பிரச்சினை குறித்து கட்சி தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, உங்களுடைய போராட்டம் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது, எனவே தயவு செய்து போராட்டத்தை கைவிடுங்கள் என்றுகூறி திடீரென கட்சி நிர்வாகிகள் மத்தியில் காலில் விழுந்தார். இருப்பினும் இதை ஏற்றுக்கொள்ள மறுத்து அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கலிவரதனை, மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்று கூறி, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.