நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் இணை இயக்குனர் விசாரணை

மாணவிகள் தர்ணா போராட்டம் எதிரொலியாக நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் இணை இயக்குனர் விசாரணை செய்தனர்.

Update: 2022-12-08 19:08 GMT

நாமக்கல்-திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 3 ஆயிரம் மாணவிகள் சுழற்சி முறையில் படித்து வருகின்றனர். இக்கல்லூரி முதல்வராக பால்கிரேஸ் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்று, இதே கல்லூரியில் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி வணிகவியல் மற்றும் பொருளாதார துறை மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோர் கல்லூரி முதல்வரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதற்கிடையே நேற்று தர்மபுரி மண்டல கல்லூரிகளின் கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, நாமக்கல் வந்து கல்லூரியில் விசாரணை மேற்கொண்டார். கல்லூரி முதல்வர் பால்கிரேஸ், அனைத்துத்துறை பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் கல்லூரி கலையரங்கில் விசாரணை நடத்தப்பட்டது. இது குறித்து இணை இயக்குனர் ராமலட்சுமியிடம் கேட்டபோது, இது கல்லூரி நிர்வாகம் சார்பில் நடைபெறும் கலந்துரையாடல், வேறு ஒன்றும் இல்லை என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்