தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கு: தலைமறைவாக இருந்த மயிலாடுதுறை பா.ஜனதா மாவட்ட தலைவர் கைது
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மயிலாடுதுறை பா.ஜனதா மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார்.;
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27 -வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் இருந்து வருகிறார். இவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி சிலர் மிரட்டல் விடுத்து வந்தனர். இது குறித்து மடாதிபதியின் சகோதரரும், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தான கணக்காளராகவும் உள்ள விருத்தகிரி, மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக ஏற்கனவே 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பா.ஜனதா மாவட்ட தலைவர் அகோரம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஆதீனம் உதவியாளர் செந்தில், செய்யூர் வக்கீல் ஜெயச்சந்திரன், திருச்சியை சேர்ந்த போட்டோகிராபர் பிரபாகரன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக் நகரம் நாகோன் பீச் பகுதியில் பா.ஜனதா மாவட்ட தலைவர் அகோரம் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் ராய்காட் சென்று அகோரத்தை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்துள்ளனர்.