நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு - போலீசாருக்கு நற்சான்று வழங்கி பாராட்டு
நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு செய்து போலீசாருக்கு நற்சான்றுகள் வழங்கி பாராட்டினார்.;
சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் உள்ள நொளம்பூர் மற்றும் ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்தை நேற்று காலை டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு செய்தார். நொளம்பூர் போலீஸ் நிலையத்திற்குள் சென்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபு அங்கிருந்த பணி பதிவேடு, பொது நாட்குறிப்பு, சி.எஸ்.ஆர்., முதல் தகவல் அறிக்கை பதிவேடுகள் மற்றும் பாரா புத்தகங்களை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து அதே கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையம் சென்றார். அங்குள்ள அனைத்து பதிவேடுகளையும் சரிபார்த்த பின்னர், பதிவேடுகள் அனைத்தையும் சரியான முறையில் பின்பற்றுவதாக கூறி பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து நற்சான்று வழங்கினார். டி.ஜி.பியின் திடீர் வருகையால் பரபரப்புடன் காணப்பட்ட போலீசார், பதிவேடுகளை சரி பார்த்து டி.ஜி.பி. பாராட்டு தெரிவித்த பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதைத்தொடர்ந்து அனைவரும் டி.ஜி.பி.சைலேந்திரபாபுவுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.