கரூர் மாவட்டம், குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் தேசிய குடற்புழு தினத்தையொட்டி குடற்புழு மாத்திரைகளை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பள்ளி மாணவிகளுக்கு வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு பொதுசுகாதார துறையின் சார்பாக இன்று (நேற்று) தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கு மீண்டும் வருகிற 16-ந்தேதி குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக குடற்புழு நீக்க மாத்திரைகள் 1 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட (3,52,036 குழந்தைகள்) மற்றும் 20 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட (93,663 பேர்) மொத்தம் 4,45,699 பேருக்கு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். குறிப்பாக, ரத்த சோகை குறைபாடு வராமல் தடுக்க முடியும்.
பயனாளிகளுக்கு கொடுக்கப்படும் மாத்திரையின் அளவு 1 முதல் 2 வயது உடையவருக்கு அரை மாத்திரையும் (200 மி.கி.) மற்றும் 2 முதல் 19 வயதுடைய மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு 1 மாத்திரையும் (400 மி.கி.) வழங்கப்படுகிறது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர் மூலமாக அங்கன்வாடி மையத்திற்கு அழைத்து வந்து குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட உள்ளது, என்றார். முன்னதாக கை கழுவுதல் குறித்து சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்முறை விளக்கம் நடைபெற்றது.