சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்
அய்யலூரில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.;
அய்யலூரிலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டு தோறும் பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டும் அய்யலூரில் இருந்து சமயபுரத்துக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக நேற்று புறப்பட்டனர். முன்னதாக காலை 8 மணி அளவில் அய்யலூரில் உள்ள சக்திவிநாயகர், மகாகாளியம்மன், முத்துமாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.
அதன் பின்னர் மதியம் 2 மணி அளவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் மற்றும் சிவப்புநிற உடை அணிந்து அய்யலூர் களர்பட்டியில் உள்ள ஆதிபராசக்தி சமயபுரம் மாரியம்மன் கோவில் முன்பு திரண்டனர். பின்னர் கோவிலில் பிரசாதம் பெற்றுக்கொண்டு மாரியம்மன் அலங்கார ரதத்தை இழுத்தவாறு சமயபுரம் நோக்கி பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.