பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2023-10-07 21:00 GMT

கோவை,அக்.8-

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வழிபடுவார்கள். இதன்படி 3-வது சனிக்கிழமையான நேற்று கோவையில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். கோவை பேட்டை உப்பாரவீதியில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கட் ரமண சுவாமி கோவிலில் பெருமாளுக்கு நேற்று அதிகாலை முதல் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. முத்தங்கி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல் ஆவாரம்பாளையம் ஸ்ரீ ருக்மணி, சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது. பக்தர்கள் துளசி மாலை அணிவித்து பெருமாளை வழிபட்டனர். உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. பீளமேடு ஆஞ்சநேயர் கோவில், பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்