பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-23 18:03 GMT

சிறப்பு அபிேஷகம்

கரூர் தாந்தோன்றிமலையில் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 18-ந் தேதி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.

இந்நிலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று அதிகாலையில் கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சாமி தரிசனம்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் கரூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலில் குவிந்தனர். நேற்று காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிந்தா.. கோவிந்தா.. கோஷம் எழுப்பி சுவாமியை தரிசனம் செய்தனர். கோவிலில் பொதுதரிசனத்துக்கும், கட்டண தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பின்னர் தெப்பக்குளம் அருகே துளசி, உப்பு, மிளகு வைத்து தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர்.

சிறப்பு பஸ்கள்

பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியாதபடி பேரிகார்டு அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கரூரில் இருந்து தாந்தோன்றிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

வேலாயுதம்பாளையம்-நொய்யல்

தோட்டக்குறிச்சி சேங்கல்மலை வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து சுவாமிக்கு மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி,பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் சுவாமிக்கு புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

தோகைமலை

தோகைமலை அருகே கழுகூரில் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் சுவாமிக்கு பால், விபூதி, மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து துளசி மற்றும் மலர் மாலைகளில் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

சின்னதாராபுரம்

சின்னதாராபுரம் அருகே உள்ள புஞ்சைகாளிகுறிச்சி உறியடி வெங்கட்ரமண சுவாமி கோவிலில் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் கொடி மரத்திற்கு பக்தர்கள் இலுப்பை எண்ணெய் விட்டு நேர்த்திக்கடன் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்