கார்த்திகை தீப திருவிழாவுக்கு குவிந்த பக்தர்கள்: ஸ்தம்பித்த போக்குவரத்து - திணறும் திருவண்ணாமலை

மகா தீபம் ஏற்றப்பட்ட பின் தரிசனம் முடித்து விட்டு சொந்த ஊர்களுக்கு பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மக்கள் திரும்பி வருகின்றனர்.;

Update:2023-11-27 02:47 IST

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 23-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கிரிவலம் சென்ற பக்தர்கள், நகரின் வீதிகள் மற்றும் வீடுகளின் மாடிகளில் நின்றிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பினர்.

 

விழாவையொட்டி ஏராளமான போலீசார், கமாண்டோ பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மகா தீபத்தை காண திருவண்ணாமலை நகருக்கு வெளியூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நேற்று முன்தினம் இரவில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர். பாதுகாப்பு பணிக்கு சுமார் 14 ஆயிரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். நேற்று பகலில் திடீரென மழை பெய்தது. பக்தர்கள் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் கிரிவலம் சென்றனர். இன்று (திங்கட்கிழமை) பவுர்ணமி என்பதால் தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்று கொண்டே உள்ளனர்.

இந்நிலையில் மாலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட பின் தரிசனம் முடித்து விட்டு சொந்த ஊர்களுக்கு பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மக்கள் திரும்பி வருகின்றனர்.

சுமார் 10 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்துள்ளநிலையில் அங்கு போக்குவரத்து தற்போது ஸ்தம்பித்துள்ளது. கிரிவலம் முடித்த பக்தர்களும் ஊர்களுக்கு செல்ல தற்காலிக பேருந்து நிலையம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். திருவண்ணாமலை நகர பகுதியில் இருந்து புறவழிச்சாலை பகுதிக்கு வாகனங்கள் ஊர்ந்து சென்று வருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்