நீண்ட வரிசையில் நின்று கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Update: 2023-05-25 19:06 GMT

வைகாசி திருவிழா

பழமையும், வரலாற்று சிறப்பும், வணிகச் சிறப்பும், ஆன்மிக பெருமையும் கொண்ட நகரம் கரூர். இத்தகைய சீரும், சிறப்பும் பெற்ற கரூரின் முக்கிய திருவிழா கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா, ஏழை, பணக்காரர் பேதமின்றி, சாதி, சமய வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பி அன்போடு வணங்கப்படும் தெய்வமே கரூர் மாரியம்மன். அம்மன் திருச்சி சமயபுரத்தில் மகமாயியாகவும், திருவேற்காட்டில் கருமாரியாகவும், கரூரில் மாரியம்மனாகவும் அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம்.

வேண்டும் வரம் தந்து பக்தர்களின் குறைகளைப் போக்கி ஆனந்தம் அளிப்பவள் கரூர் மாரியம்மன். இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வைகாசி திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கி ஜூன் மாதம் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்வதும், பிறகு அந்த கம்பத்தினை ஆற்றில் விடும் நிகழ்வும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

47 பூத்தட்டுகள் கொண்டு வரப்பட்டு...

அந்தவகையில் இந்த ஆண்டு கடந்த 14-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. அதன் பிறகு தினமும் பக்தர்கள் புனிதநீர், பால் மூலம் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அப்போது கரூர், வெங்கமேடு, தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் இருந்து 47 பூத்தட்டுகள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு படைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வெள்ளி அன்னவாகனம்

இந்நிலையில் நேற்று கரூர் மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள கம்பத்திற்கு புனிதநீர், பால் ஆகியவற்றை ஊற்றி சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் கோவிலில் உள்ள கம்பத்திற்கு புனிதநீர், பால் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலை நேரத்தில் புனிதநீர் கொண்டு வந்தவர்களின் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்பட்டது.

திருவிழாவை முன்னிட்டு இரவு வெள்ளி அன்னவாகனத்தில் மாரியம்மன் மாவடியான் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து திருவீதியுலா நடைபெற்றது. வருகிற 29-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. மேலும் 28, 29, 30, 31-ந் தேதிகளில் மாவிளக்கும், பால்குடமும் நடக்கிறது. 29, 30-ந் தேதிகளில் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தும் விழாவும் நடைபெறுகிறது. 31-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்