திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்பிரகாரத்தில்பக்தர்கள் விரதம் இருக்க அனுமதிக்க வேண்டும்: எஸ்.பி.சண்முகநாதன்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்பிரகாரத்தில்பக்தர்கள் விரதம் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று எஸ்.பி.சண்முகநாதன் கோரிக்கைவிடுத்துள்ளார்.;
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உலக புகழ் பெற்ற கந்த சஷ்டி விழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் நடந்து வருகிறது. விழாவின் நிறைவில் சூரசம்ஹார நிகழ்ச்சியும் மறுநாள் திருக்கல்யாண வைபோகமும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த விழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. அன்று முதல் 6 நாட்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலின் உட்பிரகாரத்திலும், கோவில் வளாகங்களிலும் தங்கி இருந்து விரதம் இருப்பர். இதில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற வெளிநாடுகளை சார்ந்த பக்தர்களும் தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் கந்தசஷ்டி விழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. இந்த ஆண்டு கந்தசஷ்டி விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம் ஆனால் உள்பிரகாரத்தில் தங்கி இருந்து விரதம் இருக்க அனுமதி இல்லை என்ற தி.மு.க அரசின் அறிவிப்பு பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. 1000 ஆண்டுகளுக்கு மேலாக முருகப்பெருமானின் பக்தர்கள் கடைபிடித்து வரும் ஐதீகத்தையும், இந்து சமய வரலாற்றையும் மாற்றும் விதமாக தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. இதை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன். மேலும் மழைக் காலம் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் கோவில் வளாகத்தில் தற்காலிக கூடாரங்களில் தங்கி இருந்து விரதம் இருப்பது பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். எனவே தி.மு.க அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்து பக்தர்களுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் செய்து கொடுக்கப்பட்ட அனைத்து வசதிகளையும் செய்து கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலைய துறையையும், கோவில் நிர்வாகத்தையும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.