பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
புரட்டாசி வழிபாடு
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி திண்டுக்கல்லில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். அதன்படி, திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் காலை 5 மணியளவில் திருப்பள்ளி எழுச்சி நடந்தது. அதன்பிறகு சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு ராஜ அலங்காரம் நடந்தது. அத்துடன் கோவில் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு மலர் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 6 மணியளவில் சுவாமி, தாயார் அம்பாள், ஆஞ்சநேயருக்கு சந்தனம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து சுவாமிக்கு கல்அங்கி சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நேற்று முன்தினம் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னர் நேற்று காலையில் மூலவர் வெங்கடாசலபதி, பத்மாவதி தாயார், விநாயகர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் லட்சுமி நரசிம்மர் ஆகிய சாமிகளுக்கு முத்தங்கி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தாடிக்கொம்பு, நத்தம்
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் நேற்று பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் கோபால்பட்டி கிருஷ்ணன் கோவில், வேம்பார்பட்டி வெங்கடேச பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
நத்தம் கோவில்பட்டி அக்ரஹாரம் பகுதியில் உள்ள வேணுகோபாலசுவாமி, பாமா-ருக்மணி கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கும், தேவியருக்கும் மல்லிகை, துளசி உள்ளிட்ட பல்வேறு பூமாலைகளை பக்தர்கள் காணிக்கையாக வழங்கி சாமி தரிசனம் செய்தனர்.
பழனி
பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் துளசி மாலையை சுவாமிக்கு சாற்றி வழிபட்டனர். மேலும் பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில், கரடிக்கூட்டம் ஸ்ரீஆஞ்சநேயர் கோவில், ராமநாதன்நகர் லட்சுமி நரசிம்மர் கோவில், பாலசமுத்திரம் ரங்கநாத பெருமாள் கோவில், பாலாறு அணை வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.