பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். 2 மணி நேரம் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-19 19:00 GMT

பக்தர்கள் கூட்டம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா சமீபத்தில் நிறைவடைந்தது. இருப்பினும் பக்தர்கள் கோவிலுக்கு அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் ஏராளமானோர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இந்தநிலையில் நேற்று வாரவிடுமுறை மற்றும் முகூர்த்த நாள் என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் அடிவாரம் கிரிவீதி, மலைக்கோவில், திருஆவினன்குடி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

மேலும் மலைக்கோவிலுக்கு செல்ல ஏராளமான பக்தர்கள் மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையத்தில் திரண்டனர்.

2 மணி நேரம் காத்திருப்பு

இதேபோல் தரிசன வழிகள், வெளிப்பிரகாரத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக தரிசன வழியை தாண்டி வெளிப்பிரகாரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்றும் காலை முதலே கடும் வெயில் நிலவியதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள், முதியோர்கள், குழந்தைகள் கடும் அவதியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்