பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் குவிந்தனர்.;
வாரவிடுமுறை
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதியில் நீராடி பழனி கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர். வாரவிடுமுறை, மாத கிருத்திகை நாட்களில் கோவிலில் பக்தர்கள் வருகை இரு மடங்கு காணப்படும். குறிப்பாக வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையில் வெளியூர் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாரவிடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டதால் அடிவாரம், பாதவிநாயகர் கோவில், படிப்பாதை ஆகிய இடங்களில் கடும் கூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்க நேர்ந்தது. இன்று பகலில் கடும் வெயில் சுட்டெரித்தது. ஆனாலும் வெயிலை பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
காவடி எடுத்து...
அதேபோல் மணப்பாறை, உடுமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தீர்த்தக்காவடி, மயில் காவடி எடுத்து பழனிக்கு நேற்று வந்தனர். பின்னர் கிரிவீதிகளை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அடிவாரத்தில் முடி காணிக்கை செலுத்திவிட்டு மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டனர். இந்நிலையில் பழனி அடிவாரம், கிரிவீதிகளில் பக்தர்கள் இலவசமாக வாகனங்களை நிறுத்தும் இடங்களில் சில கடைக்காரர்கள் ஆக்கிரமித்து கடை வைத்திருந்தனர்.
இதனால் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் சாலையோரத்தில் நிறுத்தினர். இதன்காரணமாக கிரிவீதியில் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே கிரிவீதிகளில் முறையாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.