காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-10-14 20:34 GMT

விக்கிரமசிங்கபுரம்:

புரட்டாசி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜை

புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, பாபநாசம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பேச்சியம்மன், பட்டவராயன், தூசி மாடன், தளவாய் மாடன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் கோவில் முன்பு ஓடும் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி விட்டு, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதற்காக நேற்று காலை முதலே ேகாவிலுக்கு பக்தர்கள் மோட்டார் சைக்கிள், கார் மற்றும் அரசு பஸ்களில் வந்து குவிந்தனர். இதனால் பாபநாசம் பணிமனையில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

பக்தர்கள் கோரிக்கை

சொரிமுத்து அய்யனார் கோவிைல சுற்றி மண்டபம் அமைப்பது மற்றும் கோவில் திருப்பணிக்காக ரூ.12 கோடி ஒதுக்கியதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார். ஆனால் இதுவரை அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கோவிலில் பக்தர்கள் செல்லும் பாதையில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் ஆன மேற்கூரை உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன்பாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்