திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்:கடலில் புனித நீராடி சாமி தரிசனம்

வாரவிடுமுறை தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்து கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2023-01-08 18:45 GMT

திருச்செந்தூர்:

வார விடுமுறை தினத்தையொட்டி, திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். வார விடுமுறை தினமான நேற்று கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

பல்வேறு ஊர்களில் இருந்தும் பெரும்பாலான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். அலங்கரிக்கப்பட்ட மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருக பெருமானின் உருவப்படத்தை வைத்து, அவரது திருப்புகழை பாடியவாறும் திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர்.

கடலில் புனித நீராடி...

அதிகாலை முதலே பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து இலவச பொது தரிசனத்திலும், ரூ.100 கட்டண தரிசனத்திலும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அய்யப்ப பக்தர்களும் அதிகளவில் திருச்செந்தூருக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி மாதத்தையொட்டி தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்