பக்தர்கள் வெள்ளத்தில் தேவதானம் கோவில் தேரோட்டம்

வைகாசி விசாக திருவிழாவையொட்டி பக்தர்கள் வெள்ளத்தில் தேவதானம் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2022-06-11 19:26 GMT

ராஜபாளையம். 

வைகாசி விசாக திருவிழாவையொட்டி பக்தர்கள் வெள்ளத்தில் தேவதானம் கோவில் தேரோட்டம் நடந்தது.

வைகாசி விசாக திருவிழா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. ஆகாய தலமாக விளங்கும் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை.

இந்த ஆண்டு கொரோனா ெதாற்று குறைந்ததால் கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.

தேரோட்டம்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட ெபரிய தேரில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமியும், சின்னதேரில் தவம்பெற்ற நாயகியும் எழுந்தருளினர். காலை 11 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பரம்பரை அறங்காவலர் துரை ரத்னகுமார் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தளவாய்புரம், சேத்தூர், முகவூர், ராஜபாளையம், கோவிலூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்மன் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் 2 தேர்களும் ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

தேரோட்டத்தையொட்டி போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்