தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா அறிகுறியுடன் வருபவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்

தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருபவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2022-06-19 21:59 GMT

சென்னை,

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் 94 என்ற நிலையில் இருந்த கொரோனா தொற்று 250 ஆக உயர்ந்துள்ளது. தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் நெறிமுறைகளின்படி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற கொரோனா தொற்று அறிகுறியுள்ள நபர்கள் குறித்த விவரங்களையும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களையும் மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகள் மட்டும் அல்லாமல், தனியார் சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் பார்க்கும் டாக்டர்களிடம் கொரோனா தொற்று அறிகுறியுள்ள நபர்கள் சிகிச்சை பெறுகிறார்கள் என்றும், அதுகுறித்த தகவல்கள் மாநகராட்சியின் கவனத்துக்கு வருவதில்லை என்றும் தெரியவருகிறது.

தவறினால் நடவடிக்கை

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் டாக்டர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வரும் நபர்களில் கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்கள் மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களை நாள்தோறும் gccpvthospitalreports@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்க தவறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்