மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் - மெட்ரோ திட்ட இயக்குநர் தகவல்

மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-23 12:23 GMT

சென்னை,

சென்னைக்கு அடுத்தக்கட்டமாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான திட்டபணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

சென்னையில் மெட்ரோ ரயில் வெற்றிகரமாக இயக்குவதை அடுத்து மதுரையிலும் மெட்ரோ ரெயில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோவை பொறுத்தவரை சென்னையில் 2 வழித்தடங்களில் இயங்கி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக 118 கிலோ மீட்டருக்கு ரூ.63 ஆயிரம் கோடி அளவிற்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ பணியானது நடைபெற்று வருகிறது.

அடுத்தடுத்து கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் முதற்கட்ட மெட்ரோ திட்ட பணிகளை மேற்கொள்ளவதற்காக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த வகையில் சென்னை மெட்ரோ நிறுவனமும் தொடர்ந்து அதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது.

விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ரெயில் நிலைய வகை, செலவுகள், செயல்படுத்தப்படும் முறை, சமூக மற்றும் பொருளாதார விவரங்கள் அறிக்கையில் இடம்பெறும். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். மதுரையில் முதல்கட்டமாக 18 ரெயில் நிலையங்களுடன் 31 கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை அமைக்கப்படும். முதல்கட்டமாக மதுரை திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்