சூளகிரி:
சூளகிரி அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய சுற்றுச்சுவரை பெண்கள் கடப்பாரையால் இடித்து தள்ளினர்.
மாரியம்மன் கோவில்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே கோவில் எதிரே உள்ள 10 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்றும், அந்த வழியை அப்பகுதி பொதுமக்கள் பொதுப்பாதையாக பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.
சுற்றுச்சுவர் இடிப்பு
இந்த நிலையில் 10 சென்ட் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் கோவில் முன்பு தனி நபர் சுற்றுச்சுவர் கட்டினார். இதனால் ஆவேசமடைந்த கிராம பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று கோவில் முன்பு திரண்டனர். பின்னர் கோவிலை சுற்றி கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை கடப்பாரையால் இடித்து தள்ளினர். இந்த சம்பவம், சூளகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.