இடுப்பளவு தண்ணீரில் இறங்கி உடலை தூக்கி செல்லும் அவலம்

மயானத்துக்கு பாதை வசதி இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி, உடலை தூக்கி செல்லும் அவலநிலை திண்டுக்கல் அருகே நீடித்து வருகிறது.

Update: 2023-05-15 17:55 GMT

மயானத்துக்கு பாதை வசதி

திண்டுக்கல் அருகே உள்ள அப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு யாராவது இறந்து போனால், அவர்களது உடலை மயானத்துக்கு எடுத்து செல்ல போதிய பாதை வசதி கிடையாது.

அப்பகுதியில் உள்ள சந்தன வர்த்தினி ஆற்று ஓடையை கடந்து தான் உடலை தூக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அவலம் நீடித்து வருகிறது. அதிலும் மழைக்காலத்தில் ஓடையை கடந்து இறந்தவரின் உடலை தூக்கி செல்வதற்கு கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையால் ஓடையில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இடுப்பளவு தண்ணீர்

இந்தநிலையில் அப்பிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் இறந்து விட்டார். அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு நேற்று முன்தினம் மயானத்துக்கு தூக்கி சென்றனர்.

அப்போது, ஓடையில் இடுப்பளவுக்கு தேங்கி நின்ற தண்ணீரை கடந்து தான் மூதாட்டியின் உடலை தூக்கி செல்ல நேர்ந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மயானத்துக்கு செல்ல பாதை வசதி இல்லை. ஓடையை கடந்து தான் மயானத்துக்கு உடல்களை தூக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மயானத்துக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்